பெண்ணை மிரட்டி சொத்தை அபகரிக்க முயலும் திமுக பிரமுகர் குடும்பம் - கொந்தளித்த பெண்
திருவாரூரில் பெண் ஒருவரை மிரட்டி சொத்துக்களை திமுக பிரமுகர் குடும்பம் அபகரிக்க முயல்வதாக பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நிலத்தகராறு
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் கௌதமி. இவர் இரவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த அசாருதீன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
கௌதமியின் தந்தை ராஜேந்திரனுக்கு கல்யாணசுந்தரம் மற்றும் ஜெயராமன் என்ற இரண்டு சகோதரர்கள்.. அதில் இரண்டாவது சகோதரராக இருக்கும் ஜெயராமன் என்பவரின் மகன் ஜெகன்.
கௌதமிக்கு அவர் தந்தையார் மூலம் வழங்கப்பட்ட சொத்தை அபகரிக்கும் நோக்கில் ஜெகன் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். இந்த பிரச்சனை நீண்ட வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில்,
கடந்த 2021-ஆம் வருடம் கௌதமி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மேலும் குடவாசல் காவல் நிலையத்திலும் இதுகுறித்து புகார் மனு அளித்துள்ளார்.
போலீசார் விசாரணை
மேலும் காவல்துறையினருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் கௌதமி மற்றும் அவருடைய கணவர் அசாருதீன், வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது குடும்பத்தாருடன் வந்த ஜெகன், அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆபாச வார்த்தைகளில் திட்டி உள்ளார்.
இதனால் ஆத்திரம்அடைந்த கௌதமி மண்வெட்டியை எடுத்து அவர்களை நோக்கி வந்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து ஜெகன் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரை ஏற்று குடவாசல் காவல் துறையினர் இன்று விடியற்காலையில் கௌதமி அவர் கணவர் அசாருதீன் ஆகிய இருவரையும் விசாரணைக்காக குடவாசல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
மேலும், புதுக்குடி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் திமுகவை சார்ந்த திவ்யா, கல்யாண சுந்தரத்தின் மகள் என்பதால் அவருடைய அழுத்தத்தின் காரணமாக குடவாசல் காவல்துறையினர் இதுவரையிலும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் கௌதமி மற்றும் அவர் கணவர் அசாருதீன் மீதும் பொய் வழக்கு போடப் போவதாக கூறுகின்றனர்.