‘’அந்த தவறுக்கு நான் தான் காரணம் ‘’ - உண்மையை ஒப்புக்கொண்ட ரவிசாஸ்திரி , நடந்தது என்ன?
2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயஸ் ஐயர் அல்லது அம்பத்தி ராயூடு ஆகிய இருவரில் ஒருவரை எடுக்காதது இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்ததாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற 50ஓவர் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்து இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறமுடியாமல் வெளியேறியதற்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே காரணமாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இதனை ரவி சாஸ்திரியே ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தனது பதவிக்காலத்தின் போது நிகழ்ந்த சில கசப்பான சம்பவங்கள் குறித்து ஓபனாக பேசி வருகிறார்.
அந்தவகையில், சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் 2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் தேர்வில் தனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து ரவி சாஸ்திரி பேசுகையில்,
'உலகக் கோப்பை தொடருக்கு மூன்று விக்கெட் கீப்பர்கள் அடங்கிய அணியை தேர்வு செய்ததில் எனக்கு உடன்பாடில்லை.
அம்பத்தி ராயுடு இல்லையென்றால் ஷ்ரேயஸ் ஐயர் என இந்த இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். தோனி, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் என மூவரையும் ஒரே அணியில் வைத்திருப்பதில் என்ன லாஜிக் உள்ளது என்பது எனக்கு புரியவில்லை' என்று தெரிவித்தார்.
மேலும் அணி தேர்வை பொறுத்தவரையில் என்னிடம் கருத்து கேட்டாலோ அல்லது பொதுவான விவாதம் நடந்தால் மட்டுமே நான் எனது கருத்தை தெரிவிப்பேன்.
மற்றபடி தேர்வுக் குழுவின் பணியில் ஒருபோதும் நான் குறுக்கிட்டது கிடையாது. அதனால் தான் அப்போது நடைபெற்ற அணி தேர்வில் நான் எதையும் சொல்லவில்லை' என தெரிவித்துள்ளார்.