காஷ்மீரில் நடக்கும் தொடர் தாக்குதல் : கடந்த ஆண்டே திட்டம் தீட்டிய ஐ.எஸ்.ஐ. வெளியான அதிர்ச்சி தகவல்
காஷ்மீரில் தற்போது நடக்கும் தொடர் தாக்குதல்கள், கடந்த வருடமே ஐ.எஸ்.ஐ. திட்டம் தீட்டியது என இந்திய உளவு அமைப்புகள் தெரிவித்து உள்ளன.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது , சில தினங்களுக்கு முன்பு பள்ளியில் பணிகளை செய்து கொண்டிருந்தபோது, பள்ளி கூடத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கு இருந்த ஆசிரியரை சுட்டு விட்டு தப்பிச்சென்றனர்.
ஆசிரியை கொலைக்கு கண்டனம் தெரிவித்து காஷ்மீரின் பல பகுதிகளில் பெண்கள் உள்பட பண்டிட் சமூக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த விஷயத்தில் பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் தலையிட்டு சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
கடந்த மே மாதத்தில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பண்டிட் சமூகத்தின் 2வது நபர் ரஜ்னி பாலா ஆவார். கடந்த மாதம் 12ந்தேதி புத்காம் மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரிந்த ராகுல் பட் என்பவர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியானார்.
சமீப நாட்களில் பண்டிட் சமூகத்தினர் தவிர, பொதுமக்கள், போலீசாரையும் பயங்கரவாதிகள் குறிவைத்து சுட்டு கொன்று வருகின்றனர். கடந்த 25ந்தேதி, ஒரு டி.வி. நடிகை அவரது வீட்டுக்கு வெளியே சுட்டு கொல்லப்பட்டார். காஷ்மீர் முழுவதும் கடந்த 26 நாட்களில், இதுவரை 10 பேர் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
அதில், 3 பேர் பணியில் இல்லாத போலீசார், 4 பேர் பொதுமக்கள் ஆவர். இந்நிலையில், இந்திய உளவு அமைப்புகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகர தகவலில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத் நகரில், கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 21ந்தேதி வெவ்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு கூட்டம் ஒன்றை நடத்தியது என தெரிவித்து உள்ளது.

அதில், யாரையெல்லாம் கொலை செய்ய வேண்டும் என்பது பற்றி திட்டமிடப்பட்டது. இதற்காக 200 பேர் கொண்ட பட்டியல் ஒன்றும் தயாரிக்கப்பட்டது என தெரிவித்து உள்ளது. இந்த கூட்டத்தில் பல முக்கிய விசயங்களும் ஆலோசிக்கப்பட்டு உள்ளன.
புதிய பெயரில் பயங்கரவாத அமைப்பு ஒன்றை நிறுவுவது, அதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளிப்போர், உளவு பிரிவு அதிகாரிகள், உள்ளூர்வாசிகள் அல்லாத ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருப்போர் மற்றும் அவர்களது கூட்டாளிகள் ஆகியோரை இலக்காக கொள்ள வேண்டும். இதன்பின் மேற்கூறிய நபர்களை இலக்காக கொண்டு வருங்காலத்தில் தாக்குதல் நடத்தி கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டதாக உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.