அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடம் மீது தாக்குதல்: போலீஸ் அதிகாரி பலி
அமெரிக்க நாடாளுமன்றம் இருக்கும் கேபிடல் கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். இன்னொருவர் காயமடைந்தார். அமெரிக்காவின் பாராளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் வெளியே பாதுகாப்பு வளையம் அமைந்த பகுதியில் மர்ம நபர் ஒருவர் காரை கொண்டு தடுப்பு பகுதியில் மோதியுள்ளார்.
இந்த சம்பவத்தில் 2 அதிகாரிகள் காயமடைந்தனர்.இதன்பின் காரில் இருந்து வெளியே குதித்த அதன் ஓட்டுனர் அதிகாரிகளை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அதிகாரி ஒருவர் பலியானார். இதனால் கேபிடால் போலீசார் அந்த நபரை சுட்டுக் கொன்றனர்.
இந்த தாக்குதல் நடத்திய நபரின் அடையாளம் தெரிய வரவில்லை. அவரது தாக்குதலுக்கான நோக்கம் பற்றிய விவரமும் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து வாஷிங்டன் பெருநகர காவல் துறை உயரதிகாரி ராபர்ட் கன்டீ கூறுகையில், இது பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையது அல்ல எனவும் இந்த தாக்குதல் பற்றி விசாரணை தொடர்ந்து நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பை கருத்தில் கொண்டு கேபிடால் கட்டிடம் முடக்கப்பட்டு உள்ளது. கட்டிடத்தின் உள்ளே இருந்து யாருக்கும் வெளியே செல்ல அனுமதியில்லை. இதேபோல், கட்டிடத்திற்குள் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.