வடமாநில இளைஞர்கள் மீது தாக்குதல்....தமிழக அதிகாரிகளை தொடர்பு கொண்ட பீகார் அரசு - டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்
பீகார் தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்து நிதிஷ்குமார் கவலை தெரிவித்துள்ளார்.
பீகார் முதலமைச்சர் கவலை
தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வரும் வடமாநில இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பீகார் மற்றும் இந்தி பேசும் மாநிலங்களின் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகியிருந்தது.

இதனிடையே பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கவலை தெரிவித்து இருந்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டில் பணியாற்றும் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக செய்திகள் மூலம் அறிந்தேன்.
இது தொடர்பாக தமிழ்நாடு அதிகாரிகளுடன் பேசி, அங்கு பணியாற்றும் பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பீகார் தலைமை செயலாளர் போலீஸ் டிஜிபியை கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழக டிஜிபி விளக்கம்
இந்த நிலையில் வடமாநில இளைஞர்களை தாக்குவது போன்ற வீடியோக்கள் திரித்து வெளியிடப்பட்டுள்ளதாகவும், அது போலியானவை என்று தமிழக டிஜிபி தெரிவித்துள்ளார். தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் கூறியிருப்பதாவது:- சமூக வலைதளங்களில் 2 போலி வீடியோக்கள் பரவி வருகின்றன. பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல அந்த வீடியோக்கள் காட்டப்பட்டுள்ளன. அந்த வீடியோக்கள் தவறானவை, போலியானவை.
இரு வீடியோக்களும் ஏற்கனவே முன்பு நிகழ்ந்த இரு வேறு சம்பவங்களை திரித்து வெளியிடப்பட்டு இருக்கின்றன. இந்த இரு வீடியோக்களில் ஒன்று திருப்பூரில் பீகார் தொழிலாளர்கள் இரு பிரிவாக மோதிக்கொண்டதுடன் தொடர்புடையது ஆகும்.
இன்னொன்று கோவையில் உள்ளூர் மக்கள் மோதிக் கொண்ட வீடியோ ஆகும். இதுதான் உண்மை . தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.