புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை - பீகார் அரசு அதிகாரிகள் பேட்டி
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை என பீகாரில் இருந்து வந்துள்ள அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு வந்த பீகார் அதிகாரிகள்
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக பீகார் மாநில கிராம வளர்ச்சி துறை செயலாளர் பாலமுருகன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவை அமைத்து பீகார் அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த குழுவில் நுண்ணறிவு பிரிவு ஐஜி கண்ணன், தொழிலாளர் நலத்துறை சிறப்பு செயலாளர் ஸ்ரீஅலோக் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் இடம்பெற்றிருந்தனர். இதில், பாலமுருகனும், கண்ணனும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், பீகார் அரசின் குழு நேற்று மாலை சென்னைக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து பீகார் அரசின் குழுவினர் சென்னையில் தொழிலாளர் நலத்துறை ஆணையரை சந்தித்து நேற்று மாலை ஆலோசனையில் ஈடுபட்டனர்.
நல்லுறவை சிதைக்க சதி
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பீகார் குழுவினர், “தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் தொடர்பாக விசாரித்தோம். இதில் பீகார் தொழிலாளர்கள் எந்த பிரச்னையும் இன்றி தமிழ்நாட்டில் இருப்பதாக தெரிவித்தனர்.
இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள நல்லுறவை சிதைப்பதற்காக சிலர் இதுபோன்று வதந்திகளை பரப்புகின்றனர்.
மேலும், இதுகுறித்து திருப்பூர், கோவை சென்று அங்கு பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் இதுகுறித்து விசாரிக்க உள்ளோம். பொய்யான வீடியோக்களை உண்மை என நம்பும் எண்ணத்தை மாற்ற வேண்டும்” என்று தெரிவித்தனர்.