இரட்டை கோபுர தாக்குதல் போல டெல்லியில் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் : பதட்டத்தில் டெல்லி விமான நிலையம்
உலகை உலுக்கிய அமெரிக்க இரட்டை கோபுரத்தின் தாக்குதல் தினம் இன்று. இந்த நிலையில் இரட்டை கோபுர தாக்குதலை போலவே டெல்லியிலும் விமானம் மூலம் வெடிகுண்டு வைத்து வெடிக்கப்படும் என்று மிரட்டல் வந்ததை அடுத்து டெல்லி விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு இரட்டை கோபுரத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அமெரிக்காவை மட்டுமல்லாது உலக நாடுகள் எங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த கோர சம்பவத்தின் காரணமாகத்தான் படு தீவிரமாக இருந்து ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம் பழிதிர்த்தது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள ரங்கோலா காவல் நிலையத்திற்கு நேற்று இரவு பத்து முப்பது மணி அளவில் ஒரு அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய மர்ம நபர், அமெரிக்காவில் நடைபெற்ற தாக்குதலை போலவே லண்டனில் இருந்து இந்தியாவிற்கு வரும் ஏர் இந்தியா விமானம் வெடிக்க வைக்கப்படும் என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.
அந்த அழைப்பு வந்த சற்று நேரத்திற்கு பின்னர் டெல்லி போலீசாருக்கு மீண்டும் அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய மர்மநபர், டெல்லி விமான நிலையத்தை கைப்பற்றத் திட்டமிட்டு இருக்கின்றனர் என்றும் கூறியிருக்கிறார்.
இதையடுத்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் போலீசாரும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும் பலப்படுத்தப்பட்டு, விமான நிலையத்தின் உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது .
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அழைப்புகள் மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இரட்டை கோபுர தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தில் இந்திய தலைநகர் டெல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது டெல்லி போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.