ஆம்பூர் அருகே மர்ம நபர்கள் அட்டூழியம்- விவசாய நிலத்தை தீயிட்டு எரித்து நாசம்
ஆம்பூர் அருகே மர்ம நபர்கள் விவசாய நிலத்தை தீயிட்டு எரித்து நாசமாக்கிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த, கைலாசகிரி ஊராட்சிக்குட்பட்ட, உமராபாத் – பேர்ணாம்பட்டு சாலையில் மாச்சம்பட்டு எல்லையருகே, சாலையோரம் உள்ள நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான புளிய மரங்கள் மற்றும் அதன் அருகில் உள்ள விவசாய நிலத்திலுள்ள நான்கு தென்னை மரமும் திடீரென நேற்று நள்ளிரவில் தீ பற்றி எரிந்தது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கைலாசகிரி ஊராட்சி மன்ற செயலாளருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். உடனே அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, கோடை காலங்களில் விவசாய நிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் சமூக விரோதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும், இயற்கை வளங்களை அழித்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த உமராபாத் காவல்துறையினர் மரங்களுக்கு தீ வைத்தது யார் என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.