அஸ்வினுக்கு அடுத்த போட்டியிலாவது வாய்ப்பு கிடைக்குமா? முக்கிய தகவலை வெளியிட்ட விராட் கோலி- ரசிகர்கள் ஆர்வம்
இங்கிலாந்து அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்குமா இல்லையா என்பது ஆடுகளத்தின் தன்மையை வைத்தே முடிவு செய்யப்படும் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மிக மிக மோசமாக இருந்ததால், இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.
கடந்த மூன்று போட்டிகளில் பெரிதாக ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யாமல் விளையாடி வந்த இந்திய அணி, அடுத்த போட்டியில் நிச்சயம் ஓரிரு மாற்றங்களுடன் களமிறங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக மிக மோசமான பார்மில் இருக்கும் துணை கேப்டன் ரஹானேவிற்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. அதே போல் அஸ்வினுக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்க வேண்டும் என கருத்தும் மீண்டும் வலுத்து வருகிறது. இந்தநிலையில், அடுத்த போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி, ஆடுகளத்தின் தன்மையை வைத்தே ஆடும் லெவன் தேர்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து விராட் கோலி பேசுகையில், “நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கும் ஓவல் ஆடுகளத்தின் தன்மை கருத்தில் கொண்டு தான் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளரை எடுக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்வோம், இது குறித்து ஆடுகளத்தின் தன்மையை கண்டறிந்த பின்னர் தான் ஆலோசனை செய்வோம்.
நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடி வருவது எங்களுக்கு பயனுள்ளதாக தான் உள்ளது. அணியின் தேவையே பொறுத்தே ஆடும் லெவனும் தேர்வு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய விராட் கோலி, இங்கிலாந்து ஆடுகளங்களில் இது போன்று நடப்பது இயல்பு தான். ஆனால் இங்கிலாந்து அணி இந்த வெற்றிக்கு முழு தகுதியானது, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் எங்களை நெருக்கடிக்குள் வைத்து கொண்டனர், குறிப்பாக போட்டியின் மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தில் அவர்களின் பந்துவீச்சை எங்களால் அவ்வளவு எளிதாக எதிர்கொள்ள முடியவில்லை.
எங்களது பேட்ஸ்மேன்கள் சொதப்பிவிட்டனர், ஆனால் எதிரணியின் பந்துவீச்சாளர்கள் மிக மிக சிறப்பாக செயல்பட்டனர். தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் செயல்படுவோம் என்று தெரிவித்தார்.