சிறுநீரை குடிநீராக மாற்றும் அதிசய உடை - எப்படி செயல்படும்?
சிறுநீரை குடிநீராக மாற்ற கூடிய உடையை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
விண்வெளி உடை
இந்த விண்வெளி உடை மூலம் நீண்ட நேர விண்வெளி நடைபயணங்களை எளிதாக மேற்கொள்ள முடியும். டூன் என்ற அறிவியல் புனைகதை நாவலின் "ஸ்டில்சூட்களால்" ஈர்க்கப்பட்ட இந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உடை மூலம் 500 மில்லி சிறுநீரை 5 நிமிடத்தில் குடிநீராக மாற்றி விடலாம்.
இந்த உடையின் வடிவமைப்பு குறித்து ஃபிரான்டியர்ஸ் இன் ஸ்பேஸ் டெக்னாலஜி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. கார்னெல் மருத்துவம் மற்றும் கார்னெல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரும், சூட்டின் இணை வடிவமைப்பாளருமான சோபியா எட்லின், "இந்த உடை பாதுகாப்பான குடிநீரின் தொடர்ச்சியான விநியோகத்தை வழங்குவதோடு,விண்வெளி வீரர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த பல பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளன" என்றும் கூறியுள்ளார்.
வடிவமைப்பு
தற்போது விண்வெளி வீரர்களின் இன்-சூட் பானம் பைகளில் ஒரு லிட்டர் தண்ணீர் மட்டுமே கையாள முடியும் என்றும், இது சந்திர விண்வெளி நடைப்பயணங்களுக்கு போதுமானதாக இல்லை. மேலும் இதில் கசிவு ஏற்படுவதால் சிலர் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள உடையில் சிறுநீர் கழிக்க ஏதுவதாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்ப வெவ்வேறு வகை மற்றும் அளவுகளில் அங்கு சிலிகான் சேகரிப்பு கோப்பை வைக்கப்பட்டுள்ளது. மேலும் கசிவு இல்லை என்பதை உறுதிப்படுத்த, கப் பல அடுக்கு நெகிழ்வான துணியால் செய்யப்பட்ட ஒரு உள்ளாடைக்குள் உள்ளது. இந்த கப் வேக்கம் பம்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
செயல்முறை
இது சிறுநீர் கழிக்கத் தொடங்கியவுடன் தானாகவே இயங்கும். சிறுநீர் ஒருமுறை சேகரிக்கப்பட்ட பின், reverse osmosis செய்யப்படுகிறது. அதன் பின், ஒரு பம்ப் பயன்படுத்தி இந்த தண்ணீரில் இருந்து உப்பு அகற்றப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிப்பதற்காக உள்ள சூட் பானம் பையில் செலுத்துவதற்கு முன், அது எலக்ட்ரோலைட்டுகளில் செறிவூட்டப்படுகிறது. விண்வெளி வீரர்களின் கழுத்தில் இருக்கும் டியூப் மூலம் இந்த தண்ணீரை குடிக்கலாம்.
இந்த அமைப்பு தோராயமாக 8kg எடையும் மற்றும் 38x23x23cm அளவுகள் உள்ளது. இந்த உடை நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் பயன்படுத்த முடியும் என கண்டுபிடிப்பாளர்கள் நம்புகின்றனர்.