இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா 2021
யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய திருக்கோவில், ஆறுமுக நாவலரின் மனம் கவர்ந்த கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குவது இலங்கை நாட்டின் நல்லூர் கந்தசாமி திருக்கோவில்.
இலங்கைத் தமிழர்களின் பூர்வீக பூமியான வடக்கு மாகாணத்தில் அமைந்த நல்லூர் கந்தசாமிக் கோவில், பெரிய கோவில் என்ற பெருமையை இந்த ஆலயம் பெற்றுள்ளது.
இலங்கை வாழ் தமிழர்களின் அபிமானத் தலமாக இக்கோயில் திகழ்கிறது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நல்லூர் கந்தசுவாமி கோயில் சிங்கள இளவரசரான சபுமல் குமார என்பவரால் கட்டப்பட்டதாக தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
2011-ம் ஆண்டு 108 அடி உயர தெற்கு கோபுரமும், 2015-ல் 108 அடி உயர வடக்குக் கோபுரவாசல் ராஜகோபுரங்களும் அமைக்கப்பட்டன. பழனியாண்டவர் சன்னிதி, சூரியனுடன் தேவியர், உற்சவத் திருமேனி உள்ளன. பிரமாண்டத் தேரும், தேர் நிறுத்த மண்டபமும் கிழக்கு வாசலின் எதிரில் அமைந்துள்ளது.
ஆலயத்தில் நடுநாயகமாக நல்லூர் கந்தசாமி விளங்குகின்றார். இங்கே வேல் வழிபாடே பிரதானம் என்பதால், கந்தன் வேலாயுதனாக, வேல் வடிவில் காட்சி யளிக்கிறார். தீப ஒளியில் இக்கோலத்தைக் காணும்போது, நம் மெய்சிலிர்க்கின்றது.
ஆடி அமாவாசை முடிந்து வரும் சஷ்டியில் பிரம்மோற்சவம் விழா தொடங்குகிறது. இந்த விழா தொடர்ச்சியாக 25 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பகலிலும் இரவிலும் வெவ்வேறு வாகனங்களில் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி உற்சவத் திருமேனிகள் வீதி உலா வரும்.