சட்டமன்ற தேர்தல் நாளினை சரித்திர நாளாக மாற்றுங்கள் - கமல்ஹாசன்
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நாளினை சரித்திர நாளாக மாற்றிக்காட்டுங்கள் என கமல் ஹாசன் அவர்கள் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
திருச்சி திருவெறும்பூர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து கமல் ஹாசன் அவர்கள் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, "ஒவ்வொரு தமிழனின் தலையிலும் அரசு ரூ.65 ஆயிரம் கடன் சுமையை ஏற்றியுள்ளது. ஒன்றை மட்டும் பொதுமக்கள் மனதில் வைத்து கொள்ளுங்கள், இலவசங்கள் எப்போதும் உங்கள் ஏழ்மையை போக்காது.
அதை நம்பாதிருங்கள் உழைப்பு மட்டும் தான் உங்களின் ஏழ்மையை போக்கும்.
மேலும் நான் 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து வருகிறேன். அனைத்து பகுதிகளிலும் சுகாதாரம் சீராக இல்லை. மேலும் நம்முடைய கட்சி வேட்பாளர்கள் அனைவருமே பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக காத்திருக்கிறார்கள். ஆகவே பொதுமக்கள் இந்த முறை எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள். தமிழகத்தையே மாற்றி காட்டுவோம்” என்றார்.