சட்டமன்ற தேர்தல் 2021: கவனிக்கப்பட வேண்டிய தொகுதிகள் என்னென்ன.?
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்ட நிலையிலும் இன்னும் பல கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிடாமலே திணறி வருகின்றனர். ஆனால் மறுபுறம் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டன பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும். தமிழகம் முழுவதும் பல நட்சத்திர வேட்பாளர்கள் களம் இறங்க உள்ளதால் பல தொகுதிகள் கடும் போட்டி உள்ளதாகவும் சவால் நிறைந்ததாகவும் மாறியுள்ளன.
அவைகள் காண்போம் கரூர்: அதிமுக சார்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியிடுகின்ற நிலையில் அவரை எதிர்த்து திமுக சார்பில் செந்தில் பாலாஜி. இருவருமே முன்னாள் அதிமுக அமைச்சர்கள் என்பது போட்டியை மேலும் சுவாரஸ்யம் ஆகியுள்ளது. போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகின்ற நிலையில் இயல்பாகவே அது நட்சத்திர தொகுதியாகி உள்ளது. ஆனால் அவரை எதிர்த்து திமுகவால் நிறுத்தப்பட்டுள்ளவர் தங்க தமிழ்ச்செல்வன்.
இரு அதிமுக பெரும்புள்ளிகள் மோதிக் கொள்வதால் போடி தொகுதி அதிக கவனம் பெற்றுள்ளது. கோவை தெற்கு: முதல் முறையாக தேர்தலைச் சந்திக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இங்கு போட்டியிடுகிறார். ஆனால் அதிமுக, திமுக கூட்டணியில் இந்த தொகுதி பாஜக மற்றும் காங்கிரசுக்கு ஒதுக்கபட்டுள்ளது. பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது.
கொளத்தூர், எடப்பாடி தொகுதிகளில் முதல்வர் பழனிசாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடுவதால் இந்த தொகுதிகளும் பெரிதும் கவனிக்கப்படுகிறது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரசும் பாஜகவும் மோதுகின்றன. பொன்.ராதாகிருஷ்ணனனும் காங்கிரஸ் சார்பில் மறைந்த வசந்தகுமார் அவர்களின் மகன் விஜய் வசந்தும் போட்டியிடுகின்றனர்.
கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜீவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் களம் காண்கின்றனர். இதனால் அதிமுக இதில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சைதாப்பேட்டை தொகுதியில் சைதை துரைசாமியும் மா.சுப்ரமணியமும் போட்டியிடுகின்றனர். இருவருமே வலுவான வேட்பாளர்கள் மேலும் இருவருமே முன்னாள் சென்னை மேயர்களாக இருந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.