”ஒரு டீ வியாபாரியால் தான் புரிந்துகொள்ள முடியும்” அஸ்ஸாமில் பிரதமர் மோடி பேசியது என்ன?
தமிழகத்தோடு சேர்த்து அஸ்ஸாம் மாநிலத்துக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றன. இந்நிலையில் பல்வேறு தேசிய அரசியல் தலைவர்களும் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் ப்ரியங்கா காந்தி அஸ்ஸாமில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். பிரதமர் நரேந்திர மோடி இன்று அஸ்ஸாமில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “டீ தொழிலாளிகளின் கஷ்டத்தை ஒரு டீ வியாபாரியால் தான் புரிந்து கொள்ள முடியும். காங்கிரஸ் அஸ்ஸாமின் வளர்ச்சியை தடுத்துவிட்டது.
அஸ்ஸாமின் டீயை அவமானப்படுத்த டூல் கிட் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. அதனை வைத்து பலரும் இணையத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் கட்சி அஸ்ஸாம் கலாச்சாரத்திற்கு ஆபத்தான கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. இவர்களை மக்கள் நிராகரித்து விடுவார்கள்” என்றார்.