அசாம்- மேகாலயாவை இணைக்கும் மிக நீளமான பாலம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
அசாம் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நேற்று காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக ரூ.3,231 கோடி மதிப்பில் மகாபாகு - பிரம்மபுத்திரா நீர்வழி போக்குவரத்தை அவர் தொடங்கி வைத்தார். இதன்மூலம் அசாமின் நேமதி, மஜூலி ஆகிய பகுதிகளுக்கு இடையிலான 420 கி.மீ. தொலைவு 12 கி.மீ. தொலைவாக குறையும்.
இந்த நீர்வழி போக்குவரத்து திட்டத்தின் மூலம் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளும் சேர்க்கப்படும். இத்திட்டத்தில் பயணிகள் போக்குவரத்துக்கு மட்டுமன்றி வர்த்தக போக்குவரத்துக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். அசாமின் துப்ரி, மேகாலயாவின் புல்பரி இடையே பிரம்மபுத்திரா நதியில் ரூ.5,000 கோடியில் புதிய பாலம் கட்ட பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
19 கி.மீ. தொலைவு கொண்ட இந்த பாலம் இந்தியாவின் மிக நீளமான பாலமாக இருக்கும். மேலும் அசாமின் காளிபாரி, ஜோர்கட் இடையிலான 8 கி.மீ.தொலைவு பாலத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இவை தவிர பல்வேறு சிறிய பாலங்கள், சாலைத் திட்டங்கள், சுற்றுலா படகு குழாம்களையும் பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.