'டபுள்ஸ் ஓடாதீங்க தோனி ; பவுண்டரி அடிங்க' - ப்ராவோ கலகல பேட்டி

MS Dhoni IPL 2022
By Swetha Subash May 09, 2022 10:16 AM GMT
Report

15-வது ஐபிஎல் போட்டியின் 55 லீக் போட்டி மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.

சென்னை அணியில் அதிகபட்சமாக டெவன் கான்வே 87 ரன்களும்,ருத்துராஜ் கெய்க்வாட் 41 ரன்களும் எடுத்தனர். இதன்பின் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ஸ்ரீகர் பரத் (8) மற்றும் டேவிட் வார்னர் (19) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.

சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறியதால், 17.4 ஓவரில் வெறும் 117 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்துள்ளது.

முன்னதாக சென்னை அணி பேட்டிங் செய்தபோது ஆன்ரிச் நார்ட்ஜே வீசிய கடைசி ஓவரில் மொயீன் அலி 9 ரன்களிலும், உத்தப்பா (டக் அவுட்) ஆகியும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதையடுத்து களமிறங்கிய டுவைன் ப்ராவோ, தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிங்கிள் தட்டிவிட்டு தோனிக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார்.

இதனை தொடர்ந்து தோனி கடைசி 2 பந்தில் தலா 2 டபுள்ஸ் ஓடினார். இதனால் மறுமுனையில் ஓடிய ப்ராவோ களைத்துப் போயிருந்தார். அவர் இரண்டு முறையும் பாய்ந்து தான் கோட்டை தொட்டார்.

இந்நிலையில், போட்டி முடிந்தபின் இதுகுறித்து பேசிய ப்ராவோ, ''நான் இறங்கியதும் முதலில் ஹாட்ரிக் விக்கெட் விழாமல் பார்த்த்துக் கொண்டேன். பின்னர் தோனிக்கு ஸ்டிரைக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

நான் அவரிடம் டபுள்ஸ் ஓடாமல் பவுண்டரி அடிக்குமாறு ஜாலியாக கூறினேன். ஆனால் ஒரு சிறந்த வீரருடன் பேட்டிங் செய்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

ருத்துராஜ், கான்வே தொடங்கி எங்கள் அணியினர் ப்ரொஃபஷனலாக அருமையாக விளையாடினர். நாங்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும், வல்லுநர்களைப் போல் விளையாடி ஆதிக்கம் செலுத்த வேண்டும்” என்றார்.