ஆசியாவின் மிகப்பெரிய ஆழித் தேரோட்டம்
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
இதன் தொடர்ச்சியாக இன்று பெரிய கொடியேற்ற விழா நடைபெற்றது இதில் சந்திரசேகரர், சண்டிகேஸ்வரர், அம்பாள், விநாயகர், முருகன் ஆகியோர் தேரோடும் வீதிகளில் கொடி சீலையை எடுத்துக் கொண்டு வீதி உலா வந்தனர்.
பின்னர், இவர்கள் தியாகராஜர் சன்னதி கொடிமரம் முன்பு நிறுத்தப்பட்டனர். பின்னர், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து ரிஷப உருவம், திரிசூலம், மங்கலச் சின்னங்கள் வரையப் பெற்ற கொடியானது, வேத மந்திரங்கள், ஆரூரா, தியாகேசா எனும் பக்த கோஷங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
அப்போது கோவில் கோபுரங்களிலிருந்து மலர்களைத் தூவி கொடியேற்ற விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது கொடியேற்றப்பட்டதை அடுத்து,
திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் மார்ச் 15 ஆம் தேதி நடைபெற உள்ளதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியைக் காண திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் கவிதா தலைமையிலான அலுவலர்கள் செய்திருந்தனர்.