ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி - வங்காளதேச அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை முன்னேறியது...!

Cricket Sri Lanka Cricket Asia Cup 2022
By Nandhini Sep 02, 2022 04:27 AM GMT
Report

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணியை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20

துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதை கருத்தில் கொண்டு, இந்த முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20 வடிவில் நடத்தப்படுகிறது. இந்தத் தொடர் முதலில இலங்கையில்தான் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அங்கு நிலவும் பொருளாதார பிரச்சினை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இரு பிரிவுகளாக 6 அணிகள்

இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. 7 முறை சாம்பியனான இந்தியாவுடன், பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருக்கின்றன. அதேவேளையில் 5 முறை பட்டமும் வென்ற இலங்கையுடன், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளன.

முதலாவது போட்டி

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை அணியை வீழ்த்தியது.

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் 2வது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. இதில் 19.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்களை எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.

ஹாங்காங்கை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு ஹாங்காங் - இந்திய அணிகள் நேருக்கு நேர் மோதின. இப்போட்டியில், 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி - வங்காளதேச அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை முன்னேறியது...! | Asia Cup 2022 Sri Lanka Cricket Win

இலங்கை வெற்றி

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், நேற்று இரவு நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் இலங்கை-வங்காளதேச அணிகள் (பி பிரிவு) மோதிக் கொண்டது.

முதலில் 'டாஸ்' ஜெயித்த இலங்கை கேப்டன் ஷனகா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, முதலில் பேட்டிங்கை வங்காளதேச அணி தொடங்கியது. இப்போட்டியில், இலங்கை அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில்லான வெற்றியை பெற்றது.

இப்போட்டியில் ஒரு அணி விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு இதுவே ஆகும். முக்கியமான கட்டத்தில் 4 நோ-பால் மற்றும் 8 வைடுகள் வீசியது வங்காளதேசத்துக்கு பின்னடைவாக அமைந்தது.

'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான் (2 வெற்றி), இலங்கை (ஒரு வெற்றி, ஒரு தோல்வி) அணிகள் சூப்பர் 4 சுற்றை எட்டின. 2 ஆட்டத்திலும் தோற்ற வங்காளதேசம் வெளியேறியுள்ளது.