சூப்பர் 4-க்கு முன்னேறிய அணிகள் இவைதான்.. மரண வெயிட்டிங்கில் ரசிகர்கள்!
ஆசியக் கோப்பையின் குழுநிலை ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், சூப்பர் 4 சுற்றுக்கு செல்லும் அணிகள் உறுதியாகியுள்ளன.
சூப்பர் 4
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், லீக் சுற்றின் கடைசி ஆட்டம் சார்ஜாவில் நடைபெற்றது. இதில், குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, ரிஸ்வான், பகர் சமான், குஷ்தில்ஷா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணி,
பாகிஸ்தான்
பாகிஸ்தான் வீரர்களின் மிரட்டலான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 38 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம், 155 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
ஆட்டமிழக்காமல் 57 பந்துகளில் 78 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட ரிஸ்வான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா
சூப்பர் 4 சுற்றிற்கு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய 4 அணிகள் முன்னேறியுள்ளன. சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டம் ஆப்கானிஸ்தானுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் இடையே இன்று மாலை நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே 4-ம் தேதி இரண்டாம் ஆட்டமும், மூன்றாவது ஆட்டம் ஸ்ரீலங்கா-இந்தியாக்கு இடையே 6-ம் தேதியும், 7ம் தேதி பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகளும், 8-ம் தேதி இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளும்,
இறுதியாக 9-ம் தேதி ஸ்ரீலங்கா-பாகிஸ்தான் அணிகளும் மோதவுள்ளனர்.
இந்த 6 போட்டிகளிலும் எந்த இரு அணி அதிக வெற்றிகளை பெறுகிறதோ, அந்த இரு அணிகளும் 11-ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் மோதவுள்ளது.