விளையாட்டில் தவறு செய்வது இயல்பு... ப்ளீஸ்.. காயப்படுத்தாதீங்க... - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் டுவிட்
விளையாட்டில் தவறு செய்வது இயல்பு தான் அதற்காக யாரையும் காயப்படுத்தாதீங்க என்று அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் டுவிட் செய்துள்ளார்.
பாகிஸ்தான் த்ரில் வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில், பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில், 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 182 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தி திரில் வெற்றியை பெற்றது.
அர்ஷ்தீப் சிங் மீது குற்றச்சாட்டு
இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பந்துவீச்சும், பீல்டிங் சொதப்பல்கள் தான் முக்கிய காரணம் என்று சமூகவலைத்தளங்களில் கடுமையாக குற்றம் சாட்டப்படுகிறது. பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் பாகிஸ்தான் வெற்றிக்கு தேவைப்பட்டது.
அப்போது, ரவி பிஸ்னாய் வீசிய ஓவரில் ஆசிப் அலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை அர்ஷ்தீப் சிங் தவறவிட்டுவிட்டார். இதுதான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. இதனால், சமூக வலைதளங்களில் அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் டுவிட்
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் இந்திய அணியின் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், இந்திய அணியின் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். மனிதர்களாகிய நாம் விளையாட்டில் தவறு செய்வது இயல்பு. விளையாட்டில் நடைபெறும் தவறுக்காக யாரையும் காயப்படுத்தாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.