‘அஷ்வின் இல்லாத அருமை இன்னைக்கு தெரியும்’ - முன்னாள் வீரர் சவால்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் அஷ்வின் இல்லாதது இந்திய அணியை நிச்சயம் இக்கட்டான நிலைக்கு கொண்டுச் செல்லும் என நாசர் ஹுசைன் கூறியுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களுக்கும், இங்கிலாந்து அணி 290 ரன்களுக்கும் ஆல்-அவுட் ஆனது.
இதனையடுத்து 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3 ஆம் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இங்கிலாந்து அணியை விட 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இதனிடையே இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹூசைன், " ஓவல் மைதானத்தின் பிட்ச் மாறி வருகிறது.4வது நாளான இன்று ஸ்பின் நன்றாக எடுக்கும். அந்த வகையில் அஷ்வின் இல்லாமல் இந்திய அணி விளையாடுவது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. நிச்சயம் அது அவர்களுக்கு பெரிய சிக்கலாக அமையும்.
அஷ்வின் இருந்திருந்தால் நேற்று 2வது நாளிலேயே இங்கிலாந்தின் மிடில் மற்றும் லோ ஆர்டரை குலைத்திருப்பார். அதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கோட்டை விட்டனர்" என்று தெரிவித்துள்லார். ஏற்கனவே இந்த டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பே, ஓவல் பிட்சின் கடைசி இரண்டு நாட்கள் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று கணிப்புகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.