கடைசி நேரத்தில் கைக்கொடுத்த அஸ்வின் - தப்பித்த இந்திய அணி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் முதுகுவலி காரணமாக விராட் கோலி விலக கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பேற்றார்.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்ய களம் கண்ட இந்திய வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மயங்க் அகர்வால் 26, புஜாரா 3, விஹாரி 20, பண்ட் 17, கே.எல்.ராகுல் 50 என அந்த அணி ஒரு கட்டத்தில் 116 ரன்களுக்கு எல்லாம் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியதால் ரசிகர்கள் பதறினர்.
அடுத்ததாக களமிறங்கிய தமிழக வீரர் அஸ்வின் 46 ரன்கள் விளாச இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென்னாப்பிரிக்க அணியில் மேர்கோ ஜேன்சண் 4 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் டுவானே ஒலிவியர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. டீன் எல்கர் 11, கீகன் பீட்டர்சன் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியை விட 167 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசி நேரத்தில் கைக்கொடுக்கவில்லை என்றால் இந்திய அணி நிலைமை திண்டாட்டம் தான் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.