"என்றைக்கும் நான் ராஜா” - அஸ்வினின் மகத்தான 2 சாதனைகள்: கொண்டாடும் ரசிகர்கள்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி வீரர் அஸ்வின் மேலும் 2 சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கான்பூர் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்களும், நியூசிலாந்து 296 ரன்களும் எடுத்தன.
49 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 3ஆம் நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள எடுத்துள்ளது.
இதனிடையே முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வீரர் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மூன்றாவது நாள் ஆட்டம் தொடர்ந்த சிறிது நேரத்திலேயே, நியூசிலாந்து தொடக்க வீரர் வில் யங் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார்.
இதன் மூலம் நடப்பு ஆண்டில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். இதற்கு முன் பாகிஸ்தான் வீரர் ஷகின் அபிரிடி அந்த இடத்தில் இருந்தார்.
மேலும் ஜேமிசன் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்திய போது அது சர்வதேச டெஸ்ட் அரங்கில் அவர் வீழ்த்தும் 415வது விக்கெட் ஆக மாறியது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரமை அஸ்வின் பின்னுக்கு தள்ளினார்.
தற்போது அஸ்வின் 416 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் இன்னும் 2 விக்கெட்டை வீழ்த்தினால் இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கை (417) அஸ்வின் பின்னுக்கு தள்ளிவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வினின் இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.