அஸ்வினுக்காக காத்திருக்கும் மிகப்பெரிய சாதனை - “இன்னும் 6 விக்கெட்டுகள் மட்டும் தேவை”

INDvNZ Rashwin
By Petchi Avudaiappan Dec 03, 2021 07:02 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் மீண்டும் ஒரு சாதனையை படைக்கவுள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2வது டெஸ்ட் போட்டி மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி சதமடித்தார். சுப்மன் கில் 44, ஸ்ரேயாஸ் அய்யர் 18, கேப்டன் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்க முதல் நாள் ஆட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 எடுத்துள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலிங் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துள்ளனர். காரணம் இந்திய அணி வீரர் அஸ்வின் தான். நியூசிலந்துக்கு எதிராக கான்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். 

இதனிடையே 2வது டெஸ்ட் போட்டியில் மற்றொரு முக்கிய சாதனையை படைக்கவுள்ளார். சமீப காலங்களில் சரிவர வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்த அஸ்வின், தற்போது தனது இடத்தை தக்கவைத்துள்ளார். அவர் இந்தாண்டு 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் சராசரியாக ஒவ்வொரு போட்டியிலும் 6 விக்கெட்களை சாய்த்துள்ளார். 

அதே போல நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் இந்த ஆண்டில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனை படைப்பார். இதுமட்டுமின்றி 4வது முறையாக முறையாக ஒரே ஆண்டில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைப்பார்.

இதற்கு முன்னர் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் மற்றும் அஸ்வின் ஆகியோர் மூன்று முறை ஒரே ஆண்டில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். இந்த முறை அஸ்வின் எடுத்துவிட்டால் முதல் பந்துவீச்சாளராக 4 ஆண்டுகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.