நாட்டை விட்டு வெளியேறிய ஆப்கன் அதிபர் - உச்சக்கட்ட பரபரப்பில் காபூல்
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி தஜிகிஸ்தான் நாட்டிற்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ படைகளும், அமெரிக்கப் படைகளும் வெளியேறத் தொடங்கியபின் தாலிபான்கள் பல்வேறு மாகாணங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் அடுத்தடுத்து கொண்டு வருகின்றனர்.
தாலிபான்களுக்கும், ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கும் நடக்கும் இந்த சண்டையில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தாலிபான் தீவிரவாதிகள் இன்று தலைநகர் காபூல் நகரை கைப்பற்றினர்.
அங்கு வசிக்கும் மக்களின் உயிருக்கும், சொத்துக்களுக்கும், மரியாதைக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. காபூல் நகரில் வசிக்கும் மக்கள் உயிரைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதேபோல் துணை அதிபர் அம்ருல்லாவும் காபூலைவிட்டு வெளியேறி விட்டதாகவும் இடைக்கால அதிபராக அலி அமகது ஜலாலி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.