ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற கிரிக்கெட் வீராங்கனை - குவியும் வாழ்த்து
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்றதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 2022 ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டியும், அமெரிக்காவின் டேனிலே கோலின்ஸூம் மோதினர்.
தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய ஆஷ்லே பார்டி முதல் செட்டை 6-3 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 7-6 என்ற கணக்கிலும் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார். சுமார் ஒரு மணி நேரம் 27 நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் அவர் சாம்பியன் பட்டம் வென்றதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை 44 ஆண்டுகளுக்கு பிறகு வென்ற முதல் ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற சாதனையை ஆஷ்லே பார்டி படைத்தார். ஓட்டுமொத்தமாக இது அவருக்கு 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். அதேசமயம் டென்னிஸ் விளையாடிய போது கிரிக்கெட் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் ஆஷ்லே பார்டி டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெற்று கடந்த 2014 ஆம் ஆண்டு கிரிக்கெட்டுக்கு திரும்பினார்.
கடும் பயிற்சி செய்த அவர் பிக்பேஷ் லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடி களமிறங்கிய முதல் போட்டியிலேயே 27 பந்துகளுக்கு 39 ரன்கள் குவித்தார். பின்னர் மீண்டும் 2016 ஆம் ஆண்டு டென்னிஸ் களத்திற்கு திரும்பிய ஆஷ்லே 2019 ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் தொடரிலும், கடந்தாண்டு விம்பிள்டன் தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். மேலும் இந்த தொடரில் அவர் ஒரு செட்டை கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.