“ஆஸி அணியினர் எங்களை தூசி மாதிரி ஊதித் தள்ளிட்டாங்க” - தோல்விக்கு பின் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேச்சு

comments joe root england vs australia ashes test australia won
By Swetha Subash Dec 28, 2021 05:31 AM GMT
Report

ஆஸ்திரேலிய அணியினர் எங்களை தூசி மாதிரி ஊதி தள்ளிவிட்டார்கள். வெற்றிக்கு முழுக்காரணம் அவர்களின் உழைப்புதான் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

மெல்போர்னில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலிய அணி தக்கவைத்தது.

மெல்போர்னில் ஆஷஸ் தொடரின் 3-வது மற்றும் பாக்ஸிங்டே டெஸ்ட் கடந்த 3 நாட்களுக்கு முன் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 185 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 267 ரன்களும் சேர்த்தன.

2-வது இன்னிங்ஸில் 82 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி ஆடத் தொடங்கியது. 2-வது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 4விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் சேர்த்திருந்தது இங்கிலாந்து அணி.

இன்று 3-வதுநாள் ஆட்டம் தொடங்கி உணவு இடைவேளைக்குள்ளாகவே மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் அடுத்த 15 ஓவர்களில் 37 ரன்களுக்குள் இழந்த இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும்14 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த தோல்விக்குப்பின் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அளித்த பேட்டியில் கூறியதாவது:

"இந்த கொரோனா காலத்திலும் நாங்கள் தொடர்ந்து விளையாடிவருகிறோம், தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல முயன்று வருகிறோம்.

இந்த வெற்றிக்கு உரியவர்கள் ஆஸ்திரேலிய அணியினர்தான். ஆஸி அணியினர் எங்களை தூசி மாதிரி ஊதித் தள்ளிவிட்டார்கள். இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால், கொரோனா காலம் உகந்ததல்ல.

நாங்கள் மைதானத்தில் விளையாடியவிதம், ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி அளித்தவிதம் சிறப்பாகத்தான் இருந்தது. டெஸ்ட் போட்டியில் எந்த மாதிரியான நெருக்கடி கொடுக்க வேண்டுமோ அதை ஆஸ்திரேலிய அணிக்கு கொடுத்தோம்.

எந்தெந்த பகுதியில் பலவீனமாக இருக்கிறோம் என்பதை அறிவோம், அதை மேம்படுத்த முயற்சிப்போம். அடுத்த இரு போட்டிகளிலும் வலிமையாகத் திரும்பிவருவோம்" என தெரிவித்தார்.