ஆஸ்திரேலியாவில் தொடங்கியது ஆஷஸ் டெஸ்ட் - இங்கிலாந்து அணி பேட்டிங்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றுள்ளது.
ஆஷஸ் டெஸ்ட் என்பது ஆஸ்திரேலியா,இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெறும் பாரம்பரியமிக்க உணர்வுபூர்வமான ஒரு தொடராகும். களத்தில் எப்போதும் நீயா?, நானா? என இரு அணிகளும் ஆக்ரோஷமாக மல்லுக்கட்டுவார்கள் என்பதால் இந்த தொடரை காண ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருப்பார்கள்.
இதனிடையே இந்தாண்டுக்கான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்குகிறது.இப்போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தசைப்பிடிப்பு காரணமாக களமிறங்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் (கேப்டன்) ஸ்டூவர்ட் பிராட் , ரோரி பேர்ன்ஸ், ஜாஸ் பட்லர், ஹசீப் ஹமீத், ஜேக் லீச், டேவிட் மலான் , ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் , மார்க் வுட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்கேன், டிராவிஸ் ஹெட், கேமரான் கிரீன், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ்(கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஹோஸ் ஹேசில்வுட் இடம் பெற்றுள்ளனர்.