“ஆல் ஏரியாவுலயும் அண்ணே கிங்கு டா” - மைதானத்தில் திடீரென ஸ்பின்னராக மாறி அசத்திய வேகப்பந்து வீச்சாளர்
இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஆலி ராபின்சன் சுழற்பந்துவீசியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி பகலிரவு ஆட்டமாக பரபரப்பான நான்காவது நாளை எட்டியிருக்கிறது.
தற்போது நடைபெற்று வரும் இந்த நான்காவது நாள் ஆட்டத்தில் சுவாரஸ்யமான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதாவது, வேகப்பந்து வீச்சாளரான ஆலி ராபின்சன் திடீரென ஸ்பின்னராக மாறி ஆஃப் ஸ்பின்னை வீச தொடங்கிவிட்டார். இந்த நிகழ்வு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆலி ராபின்சன் இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இங்கிலாந்து அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களான ப்ராட் மற்றும் ஆண்டர்சன் முதல் போட்டியில் ஆடவில்லை.
அவர்கள் இல்லாத குறையை போக்கும் வகையில் முதல் போட்டியில் ராபின்சன் சிறப்பாக வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இங்கிலாந்து அந்த போட்டியில் தோற்றியிருந்தாலும் ராபின்சன் கவனம் ஈர்க்கும் வகையில் பெர்ஃபார்ம் செய்திருந்தார். இந்நிலையில் அடிலெய்டில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நன்றாகவே பந்து வீசி வந்தார்.
இப்போது நடைபெற்று வரும் இந்த போட்டியில் நான்காம் நாளில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த இன்னிங்ஸிலும் முக்கிய பேட்ஸ்மேனான ஸ்மித்தின் விக்கெட்டை வேகப்பந்து வீச்சாளரான ராபின்சனே வீழ்த்தியிருந்தார்.
இப்படி நன்றாக வேகப்பந்து வீச்சை வீசிக்கொண்டிருக்கும் சமயத்திலேயே திடீரென ஸ்பின்னராக மாறி ஆஃப் ஸ்பின்னை வீச தொடங்கினார்.
மூன்று ஓவர்கள் முழுக்க முழுக்க ஆஃப் ஸ்பின்னராக மாறி பந்து வீசியிருந்தார்.
அதிரடியான வேகத்தில் ஹெல்மட்டில் வந்து மோதும் அளவுக்கு பந்தை வேகமாக வீசிக் கொண்டிருந்த ராபின்சன், திடீரென ஆரவாரமின்றி அமைதியாக ஆஃப் ஸ்பின் வீசியது ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது.
இணையம் முழுவதும் ராபின்சனின் ஸ்பின் பௌலிங்கே இப்போது ட்ரெண்டாகி வருகிறது.