ஆஷஸ் டெஸ்ட் - இங்கிலாந்து அணியை 275 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

cricket australia vs england ashes test australia won
By Swetha Subash Dec 20, 2021 10:49 AM GMT
Report

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்டை ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.இதனால் ஆஷஸ் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது.

பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டை ஆஸி அணி எளிதாக வென்றது. 2019-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.

இதுவரை நடைபெற்ற 71 ஆஷஸ் தொடர்களில் 33-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன.

2017-18 ஆஷஸ் தொடரை வென்று 2019 தொடரை சமன் செய்ததால் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலிய அணி வசம் உள்ளது. 2-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் வியாழன் அன்று தொடங்கியது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால் ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ், அடிலெய்ட் டெஸ்டிலிருந்து விலகினார்.

அவருக்குப் பதிலாக பிரபல வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆஸி. கேப்டனாகவும் டிராவிஸ் ஹெட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்கள்.

மைக்கேல் நசீர் ஆஸி. அணியில் இடம்பிடித்தார். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி, 150.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

லபுஷேன் 103, வார்னர் 95, ஸ்டீவ் ஸ்மித் 93 ரன்கள் எடுத்தார்கள். ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 84.1 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

டேவிட் மலான் 80, கேப்டன் ஜோ ரூட் 62 ரன்கள் எடுத்தார்கள். ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் லயன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இங்கிலாந்து அணி ஃபாலோ ஆன் ஆனாலும் 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய ஆஸி. அணி முடிவெடுத்தது.

இங்கிலாந்து அணி 237 ரன்கள் பின்தங்கியிருந்தது. ஆஸி. அணி 2-வது இன்னிங்ஸில் 61 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

லபுஷேன், டிராவிஸ் ஹெட் தலா 51 ரன்கள் எடுத்தார்கள். இதனால் பகலிரவு டெஸ்டை வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 468 ரன்கள் இலக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் 5-ம் நாளன்று தோல்வியைத் தவிர்க்கப் போராடிய இங்கிலாந்து அணி, 113.1 ஓவர்களில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

கிறிஸ் வோக்ஸ் 44 ரன்கள் எடுத்தார். ஜாஸ் பட்லர், 207 பந்துகளை எதிர்கொண்டு 26 ரன்கள் எடுத்து கடைசியில் ஹிட் விக்கெட் முறையில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

ஜை ரிச்சர்ட்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2-வது டெஸ்டை 275 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஆஷஸ் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. 3-வது டெஸ்ட், மெல்போர்னில் டிசம்பர் 26 அன்று தொடங்குகிறது.