அதிமுக தலைமை அலுவலக சாவி யாருக்கு : உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
அதிமுக தலைமை அலுவலக சாவி தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அதிமுக விவகாரம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வருவாய் துறை அதிகாரிகள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இன்று விசாரணை
இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

ஓ.பன்னீர்செல்வம் கட்சி அடிப்படை உறுப்பினராக இல்லாத போது கட்சியின் அலுவலகத்தின் அதிகார உரிமையை கோர முடியாது என்றும் தலைமை அலுவலகத்தின் சாவியை தன் வசம் ஒப்படைக்க கூறுவதில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்றும் பல விவகாரங்களில் ஓ பன்னீர்செல்வம் கையாடல் செய்துள்ளார் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழீழம் கோரும் புலம்பெயர்ந்தோருடன் தொடர்பில்லை : தென்னிலங்கையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா! IBC Tamil