ஜி.பி முத்துவை வைத்துக்கொண்டு அதிவேகமாக பைக் ஓட்டிய யூடியூபர் மீது வழக்கு பதிவு
அதிவேகமாக வாகனத்தை இயக்கியதாகவும், மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் இருசக்கர வாகனத்தை இயக்கியதாகவும் யூடியூபர் டிடிஎப் வாசன் மீது கோவை மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
யூடியூபர் டிடிஎப் வாசன்
கோவை மேட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த டிடிஎப் வாசன் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தின் மூலம் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து அதனை யூடியூபில் பதிவேற்றுவதை வழக்கமாகக் கொண்டவர்.
ஒரு கட்டத்தில் அதிவேகமாக வாகனங்களை இயக்கி SPEEDO METER இல் வாகனம் செல்லும் வேகத்தை பதிவு செய்து அதனை தனது “twin throttles” யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்தார்.
எச்சரித்த காவல்துறையினர்
கடந்த சில மாதங்களுக்கு முன் டிடிஎஃப் வாசன் தனது பிறந்த நாளை கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் பாலோவர்களுடன் கொண்டாடினார் . இந்த வீடியோ காட்சி வைரலான நிலையில் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன.
அதன் அடிப்படையில் போலீசார் டிடிஎப் வாசனை எச்சரித்தனர். இந்த நிலையில் கடந்த 14ம் தேதி டிக் டாக் மூலம் பிரபலமான யூடியூபர் ஜி.பி.முத்துவை தனது இருசக்கர வாகனத்தில் அமர வைத்த டிடிஎப் வாசன் கோவை பாலக்காடு சாலையில் 150 கிலோமீட்டர் வேகத்துக்கு மேலாக வாகனத்தை இயக்கி அதனை யூட்யூபில் பதிவேற்றம் செய்திருந்தார்.
வாசன் மீது வழக்கு பதிவு
கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் நபர்களை தாண்டி இந்த வீடியோ பதிவு, சர்ச்சையாக வெடித்த நிலையில் கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 279 IPC, 184 MV act இல் போத்தனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்