விமான நிலையத்தில் பதட்டம் : எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 5 பேர் மீது மதுரை அவனியாபுர காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி மீது வழக்கு
மதுரை விமானநிலையத்தில் அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன் என்பவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக ராஜேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் 5 பேர் மீது மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மதுரைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி விமான நிலைய பேருந்தில் செல்லும்போது, அவருக்கு எதிராக அமமுகவைச் சேர்ந்த நிர்வாகி ராஜேஸ்வரன், சமூக வலைதள நேரலையில் முழக்கங்கள் எழுப்பினார்.

இதனால் அதிமுக நிர்வாகிகள் அவரது மொபைலை வாங்கி விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரிடம் கொடுத்தனர், மேலும் அதிமுகவினர் சிலர் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.
காவல்துறை விசாரணை
இதனையடுத்து ராஜேஸ்வரன் தொடர்ந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 5 பேர் மீது மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது.
மேலும் பொது இடங்களில் அரசியல் கட்சி தலைவரை தாக்குவது போல் பேசுவது போன்ற புகாரின் அடிப்படையில், ராஜேஸ்வரன் மீது அதிமுகவின் ஆர்.பி.உதயகுமார் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்ததால், அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.