அசானி புயலால் நடுக்கடலில் சிக்கி உயிருக்கு போராடி 9 மீனவர்கள் - பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்

asani cyclone
By Nandhini May 12, 2022 11:18 AM GMT
Report

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்த 8ம் தேதி புயலாக உருவெடுத்தது. இதற்கு ‘அசானி’ என்று பெயர் வைக்கப்பட்டது. இந்தப் புயல் வடக்கு ஆந்திரம் ஒடிசா கடற்கரையை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகா்ந்து, ஆந்திர கடல் பகுதியில் நிலைகொண்டது. இதனால் ஆந்திர மாநில வட கடலோர மாவட்டங்களில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்ந்தது.

அசானி புயல் காரணமாக ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநில கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களான ஸ்ரீகாகுளம், பபாத்லா, ஓங்கோல் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ரகீம் (42), அப்துல் காதர் (42), அசம் (40), மைதீன் (45), சதன் (35), மீரான் (45), கிஜோ (25), கனி மரைக்காயர் (45) ரபீக் (19) ஆகிய 9 பேர் நேற்று அதிகாலை திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சங்குகுளி தொழிலுக்கு சென்றனர்.

அவர்கள் நேற்று மாலை திரேஸ்புரம் கடற்கரையிலிருந்து 10 கடல் மைல் தொலைவில் புதிய துறைமுகம் அருகே சங்குகுளித்து கொண்டிருந்தபோது கடலில் பலத்த காற்று வீசியது.

இதனால் கடல் அலைகள் அவர்கள் சென்ற படகின் மீது மோதியது. திடீரென அவர்களது படகில் ஓட்டை விழுந்து தண்ணீர் உட்புகுந்தது. தொடர்ந்து அந்த படகு கடலில் மூழ்க தொடங்கியது.

இதனால், அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் கடலில் குதித்தனர். சுமார் 1 மணி நேரம் அவர்கள் தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடி கத்தி கூச்சலிட்டனர். இவர்களை கத்தும் சத்தம் கேட்டு சற்று தூரத்தில் மீன்பிடித்த சக மீனவர்கள் பார்த்து அங்கு விரைந்து வந்தனர்.

அப்போது, நடுக்கடலில் தத்தளித்த அந்த 9 மீனவர்களை பத்திரமாக மீட்டு, திரேஸ்புரம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக 9 மீனவர்கள் உயிர் தப்பினார்கள். இவர்கள் சென்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள படகுகள் முற்றிலும் சேதம் அடைந்தது. 

அசானி புயலால் நடுக்கடலில் சிக்கி உயிருக்கு போராடி 9 மீனவர்கள் - பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம் | Asani Storm