கரையை கடந்தது அசானி புயல்... ஆந்திராவில் மழை நீடிக்கும் என அறிவிப்பு
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த அசானி புயல் ஆந்திரா அருகே கரையை கடந்தது.
வங்கக்கடலில் நிலைக் கொண்டிருந்த அசானி புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதேசமயம் ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி பகுதியில் இருந்து 590 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா கடற்கரையையொட்டி மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவை அடைய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இதனிடையே அசானி புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் மற்றும் நர்சாபூர் இடையே ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி கரையைக் கடந்தது.இதன் காரணமாக ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில கடற்கரையோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு ஏற்கனவே முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் செல்லக்கூடாது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அசானி புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அதேபோல் மே 10 ஆம் தேதி சென்னையில் இருந்து ஹைதராபாத், மும்பை, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது.
புயல் கரையைக் கடந்தாலும் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதுடன் கனமழை பெய்யும் என்றும், மீண்டும் காற்றழுத் தாழ்வு நிலையாக வலுவிழந்து ஏனாம் -காகிநாடா பகுதியில் வங்காள விரிகுடாவை அசானி அடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.