ஆர்யன் கான் ஒரு நிரபராதி - தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அறிக்கை தாக்கல்

Shah Rukh Khan
By Nandhini May 27, 2022 10:46 AM GMT
Report

சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இதனையடுத்து, ஆர்யன்கானை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு, மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீது மராட்டிய மந்திரி நவாப் மாலிக் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். குறிப்பாக சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட சோதனை போலியானது என்றார்.

இந்த விவகாரத்தில், பொது சாட்சியான பிரபாகர் சாயில் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்தார். அதில் அவர் போதைப்பொருள் வழக்கில் ஆர்யன்கானை விடுவிக்க ஷாருக்கான் ரூ.25 கோடி பேரம் பேசியதாக கூறினார்.

இந்த பேரம் குறித்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மற்றொரு முக்கிய சாட்சியான கிரன் கோசவி மற்றும் சாம் டிசோசா, ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானி ஆகியோர் லோயர் பரேல் பகுதியில் அக்டோபர் 3-ம் தேதி சந்தித்து பேசியதாக கூறினார். பிரபாகர் சாயிலின் இந்த குற்றச்சாட்டு குறித்து மும்பை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மகனை வெளியே கொண்டு வருவதற்கு ஷாருக்கான் 3 முறை முயற்சித்தும் முடியாமல் போன நிலையில், இந்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம் ஆர்யன்கானுக்கு ஜாமீன் வழங்கியது.

ஆர்யன் தொடர்ந்து போதை பொருள் பயன்படுத்தியதாக போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்தாலும், பார்ட்டியின் போது ஆர்யன் போதையில் இல்லை என்றும், அவரிடமிருந்து போதை பொருள் கைப்பற்றவில்லை என்றும் ஷாருக்கான் வழக்கறிஞர் வாதாடியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் ஒரு நிரபராதி என்று தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.         

ஆர்யன் கான் ஒரு நிரபராதி - தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அறிக்கை தாக்கல் | Aryan Khan Shah Rukh Khan