ஆர்யன் கானுடன் செல்ஃபி எடுத்த கிரண் கோஸாவி அதிரடி கைது
போதைப் பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கானுடன் செல்ஃபி எடுத்த கிரண் கோஸாவி கைது செய்யப்பட்டுள்ளதாக புனே போலீசார் தெரிவித்துள்ளனர்.
மும்பையிலிருந்து கோவா செல்லும் சொகுசுக் கப்பல் ஒன்றில் ரகசியமாய் நடைபெற்ற விருந்தில், போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதான நபர்களில் ஆர்யன் கானும் அடங்குவார்.
ஷாருக் கானின் மகன் என்பதால் ஆர்யன் கைது விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கைதான தினத்தன்று உடனிருந்த ஒரு நபர் அவருடன் கப்பலிலும், என்சிபி அலுவலகத்திலும் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
போதைத் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆர்யனுடன் ஒரு மொட்டைத்தலை நபரின் செல்ஃபி படம் சமூக ஊடகங்களில் வைரலானது.
யார் அந்த நபர்? அவர் ஏன் அங்கிருந்தார் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. குறிப்பாக மகாராஷ்டிர மாநில எதிர்க்கட்சியான தேசிவாத காங்கிரஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.
இந்நிலையில், கிரண் கோஸாவி என்சிபி அலுவலரோ அல்லது பணியாளரோ இல்லை என்றும், அக்டோபர் 2 ஆம் தேதி என்சிபி நடத்திய சோதனையில் சாட்சியாக கப்பலில் இருந்தார் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
அவர் மீது ஏற்கெனவே மோசடி வழக்கு இருப்பதாகக் கூறி புனே போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டனர்.
அந்த நபரை போலீஸார் வலை வீசித் தேடிவந்த நிலையில், அவர் புனேவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக அந்த நபர் தான் உத்தரப் பிரதேசத்தில் சரணடைவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் தற்போது புனேவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரண் கோஸாவி தன்னை ஒரு தனியார் டிடெக்டிவ் என அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நபர் என்சிபி சார்பில் ஆர்யன் கானை விடுவிக்க மிகப்பெரிய தொகையைக் கேட்டு பேரம் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கிரணின் பாதுகாவலர் எனக் கூறிக்கொள்ளும் பிரபாகர் செயில் தான் இந்த பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கிரன் கோஸாவி, ரூ.25 கோடி வரை பேரம் பேசியதாகவும் அதில் 7 கோடி ரூபாய் என்சிபி பிராந்தியத் தலைவருக்காகக் கேட்டதாகவும் பிரபாகர் செயில் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் கோஸாவி கைது செய்யப்படுள்ளது இந்த வழக்கில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ஆர்யன் கானின் ஜாமீன் மனு இன்று மீண்டும் மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.