ஆர்யன் கானுக்கு எதுவும் தெரியாது அவரிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை - சாம் டிசோசா தகவல்

Case Drug Aryan Khan sam d'souza
By Thahir Nov 04, 2021 02:56 PM GMT
Report

ஆர்யன் கான் அப்பாவி, அவரிடம் போதை பொருள் கைப்பற்றப்படவில்லை என கிரன் கோசவி கூறினார் என முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவில் சாம் டிசோசா கூறியுள்ளார்.

போதை பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த மாதம் சொகுசு கப்பல் போதை பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கைது செய்தனர்.

இதில் போதை பொருள் வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இதில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானியிடம் பேரம் பேசியவர்கள் தொழில் அதிபர் சாம் டிசோசா மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவின் சாட்சி கிரன் கோசவி எனவும் கூறப்படுகிறது.

எனவே ரூ.25 கோடி பேரம் தொடர்பாக போலீசார் சாம் டிசோசாவிடம் விசாரணை நடத்துவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தநிலையில் முன் ஜாமீன் கேட்டு சாம் டிசோசா மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், கடந்த மாதம் 2-ந் தேதி ஆர்யன் கான் சொகுசு கப்பலில் போதை பொருள் வழக்கில் சிக்கியதாக எனக்கு தகவல் கிடைத்து.

இதையடுத்து நான் சொகுசு கப்பல் டெர்மினலுக்கு சென்றேன். அங்கு கிரன் கோசவி மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவின் மற்றொரு சாட்சியான மனிஷ் பானுசாலியை சந்தித்தேன்.

அப்போது போதை பொருள் தடுப்பு பிரிவினர் ஆர்யன் கானை பிடித்து வைத்திருப்பதாக கிரன் கோசவி என்னிடம் கூறினார்.

மேலும் ஆர்யன் கானிடம் இருந்து போதை பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை, அவர் ஒரு அப்பாவி எனவும் கிரன் கோசவி தெரிவித்தார்.

எனவே வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க உதவி தேவைப்படுவதாக கூறினார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.பி. தாவடே அமர்வு முன் நடந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி முன்ஜாமீன் கேட்டு முதலில் செசன்ஸ் கோர்ட்டில் முறையிடு மாறு சாம் டிசோசாவுக்கு உத்தரவிட்டார். மேலும் அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.