இஸ்லாமியர் என்பதால் ஷாருக்கான் மகனை குறிவைப்பதா? - சீமான் கடும் கண்டனம்

seeman NTK aryankhan
By Petchi Avudaiappan Oct 26, 2021 04:59 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

இஸ்லாமியர் என்பதாலேயே நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்கானைக் குறிவைப்பதாக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த கப்பலில் சாதாரணப் பயணிகளை போல சென்று கண்காணித்த போது, தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியதாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் உட்பட 8 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஷாருக்கானின் மகன் இதில் சிக்கி உள்ளதால் இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் இருமுறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஆர்யன்கானை விடுவிக்க 25 கோடி ரூபாய் அளவுக்கு பேரம் பேசியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன் கானைப் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைதுசெய்த வழக்கில் அதிகார அத்துமீறலும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளும் நடந்தேறி வருவது நாடெங்கிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் ஒரு இஸ்லாமியர் என்பதாலேயே, அவரைக் குறிவைத்து அரசதிகாரம் காய்களை நகர்த்தி வருவது கடும் கண்டனத்திற்குறியது. ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடிகள் வரை பேரம் பேசப்பட்டன என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஆர்யன் கானையைப் பிணையில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு, போதை விருந்து நடந்ததாகச் சொல்லப்படும் சொகுசுக்கப்பல் நிர்வாகத்தின் மீது எடுத்த நடவடிக்கையென்ன? என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. 

தவிர்க்க இயலா பல்வேறு ஐயங்களும், விடைதெரியா கேள்விகளும் எழும் நிலையில், ஷாருக்கானின் மகன் என்பதாலேயே, இவ்வழக்கில் ஆர்யன் கான் சிக்க வைக்கப்பட்டுள்ளார் எனும் வாதத்தில் உண்மையில்லாமல் இல்லை. குஜராத் மாநிலத்தில் அதானி குழுமத்தால் நடத்தப்படும் முந்த்ரா துறைமுகத்தில் 2,988.21 கிலோ எடையும், 21,000 கோடியிலான சந்தை மதிப்பும் கொண்ட போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் ஆர்வம் காட்டாத மத்தியில் ஆளும் பாஜக அரசு, போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஆர்யன் கானை கைதுசெய்த வழக்கில் காட்டும் முனைப்பும், தீவிரமும் பாஜக அரசின் அப்பட்டமான அதிகார தலையீட்டையும், அரசியல் இலாப நட்ட கணக்கீடுகளையுமே காட்டுகிறது.

மதச்சார்பின்மை எனும் மகத்தானக் கோட்பாட்டினைக் குலைத்து, சொந்த நாட்டு மக்களையே மதத்தால் பிளந்து பிரிந்து, மத ஒதுக்கல் செய்யும் மத்தியில் ஆளும் மோடி அரசின் செயல் வெட்கக்கேடானது. பாஜக அரசின் இக்கொடுங்கோல் செயல்பாடுகளுக்கு வன்மையான எதிர்ப்பைப் பதிவுசெய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.