ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது மும்பை உயர் நீதிமன்றம்
மூன்று வார சிறை வாசத்திற்கு பிறகு, ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
சொகுசு கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தில் போதை தடுப்பு பிரிவு சோதனை நடத்தியதை தொடர்ந்து, ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார்.
கடந்த அக்டோபர் 3ஆம் தேதி முதல் அவர் போதை தடுப்பு பிரிவின் காவலில் இருந்துவருகிறார். பின்னர், அக்டோபர் 8ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர் மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு இரண்டு முறை ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. சோதனை நடத்தப்பட்டபோது, அவர் போதை பொருளை பயன்படுத்தவில்லை என்பதையே அவர் தரப்பு வழக்கறிஞர் வாதமாக தொடர்ந்து முன்வைத்துவந்தார்.
இருப்பினும், ஆர்யன் கானின் பின்னணியில் சர்வதேச போதை பொருள் கும்பல் இருப்பதாகவும் இது ஒரு சதிச் செயல் என்றும் போதை தடுப்பு பிரிவு சார்பில் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, ஆர்யன் கானின் வாட்ஸ்அப் உரையாடல் அவர் சர்வதேச போதை பொருள் கும்பலுடன் தொடர்பில் இருப்பதை எடுத்துரைக்கிறது என்றும் போதை தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
ஆர்யன் கானுடன் கைது செய்யப்பட்ட நண்பர்களான அர்பாஸ் மேர்சன்ட், முன்மும் தமேச்சா ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.