நூலகத் துறையிலும் Party Fund, தவெக அரசு மிகக் கடுமையாகத் தண்டிக்கும் - அமைச்சர் அருண்ராஜ்

DMK K. G. Arunraj
By Karthikraja Nov 06, 2026 03:12 PM GMT
Report

minister arunraj says dmk collect party fund in library dept: பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் தவெக அரசு மிகக் கடுமையாகத் தண்டிக்கும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு

பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் வாங்கப்பட்டதில் மாபெரும் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் அம்பலப்படுத்தியுள்ளார். 

நூலகத் துறையிலும் Party Fund, தவெக அரசு மிகக் கடுமையாகத் தண்டிக்கும் - அமைச்சர் அருண்ராஜ் | Arunraj Says Dmk Collects Party Fund In Library

இதில், அகல் விளக்கு என்ற பதிப்பகத்திலிருந்து வாங்கப்பட்ட புத்தகங்கள் போலியான பெயர்களிலும், தவறான தகவல்களாலும் உருவாக்கப்ட்டுள்ளதோடு, பல மடங்கு கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் நூலகத் துறையிலும் Party Fund வசூலிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் அருண்ராஜ், அரசு சட்டத்தின் கரங்களால் மிகக் கடுமையாகத் தண்டிக்கும் என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அருண்ராஜ் கண்டனம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நூலகத் துறையிலும் Party Fund! பெரியார் அறிவுலகம் பெயரில் திமுக நடத்திய பெருங் கொள்ளை! மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் செய்த மாபெரும் அறிவுத் துரோகம்! 

நூலகத் துறையிலும் Party Fund, தவெக அரசு மிகக் கடுமையாகத் தண்டிக்கும் - அமைச்சர் அருண்ராஜ் | Arunraj Says Dmk Collects Party Fund In Library

அறிவுப் புரட்சி மலர வேண்டிய கோவையின் மண்ணில், 'பெரியார் அறிவுலகம்' என்ற புனிதப் பெயரின் பின்னால் அரங்கேற்றப்பட்டிருப்பது தமிழக வரலாறே கண்டிராத ஒரு மாபெரும் அறிவுத் திருட்டு!

யார் தொடங்கிய திட்டமாக இருந்தாலும், அது மக்கள் நலன் சார்ந்தது என்றால் மாற்றாந்தாய் மனப்பான்மையின்றித் தொடர வேண்டும் என்கிற உன்னத நோக்கோடுதான், கடந்த அக்டோபரில் அந்த நூலகத்தின் வாயில்களை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

முன்னாள் முதலமைச்சர் திரு ஸ்டாலின் கோவையில் சில நாட்களுக்கு முன் தனக்குத்தானே பாராட்டு விழா நடத்தி, போலிப் பெருமைகளைச் சுயபுராணமாகப் பாடிச் சென்றார். ஆனால், அரண்மனை நாடகங்கள் எத்தனை காலம் நிலைக்கும்?

இதோ, நம் கொங்கு மண்ணின் மைந்தரும், திருச்செங்கோட்டின் பெருமைமிகு எழுத்தாளருமான பெருமாள் முருகன் அவர்களின் கூர்மையான பேனா முனை, அந்த மாயத்திரையைக் கிழித்து அதிர்ச்சி தரும் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது!

அகல் விளக்குப் பதிப்பகம், உதயசூரியன் பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகம் என்ற முகமூடிகளை மாட்டிக்கொண்டு, மனித மூளை சிந்திக்காத... முழுக்க முழுக்கச் செயற்கை நுண்ணறிவால் அச்சுக்கூடத்தில் அவசரமாக உற்பத்தி செய்யப்பட்ட விஷக் குப்பைகளை நூல்களாக மாற்றி, இந்த நூலகத்தின் அலமாரிகளில் திமுக அரசு திணித்திருக்கிறது என்கிற உண்மை தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.

பாரதியாரின் நெஞ்சுரமிக்க வரலாற்றையே தலைகீழாகப் புரட்டிப் போட்டும், காலத்தால் அழியாத அறநெறி நூலான நாலடியாருக்கே பொய்யான புனைவுகளைக் கட்டவிழ்த்து விட்டும், எதிர்காலத் தலைமுறையினரின் சிந்தனையில் அறியாமையின் நஞ்சை விதைக்கத் துணிந்திருக்கிறது இந்தத் திருட்டுக் கூட்டம்.

கல்வி, சிந்தனை, பகுத்தறிவு என்று மேடைதோறும் முழங்கிய தீய சக்தி திமுகவின் ஆட்சியில், இந்த ஒட்டுமொத்தப் பாவச் செயலுக்கும் விதை போட்டது யார்? முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், '400 கோடி வசூல் புகழ் மகேஷ்' தலைமையில் அமைக்கப்பட்ட மாநில நூலகக் குழுவின் மூலமாக நூலகத் துறையிலும் Party Fund ஆ எனத் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள்.

ஒருபுறம் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்று பசப்பு வார்த்தைகளால் போலி முழக்கமிட்டுவிட்டு, மறுபுறம் தந்தை பெரியாரின் பெயரையே களங்கப்படுத்தும் வகையில் போலி எழுத்தாளர்கள், போலிப் பதிப்பகங்கள் வழியே கொள்ளையடித்த திமுகவின் வஞ்சக முகம் இன்று நாறிப்போய்க் கிடக்கிறது. 

அடுத்த தலைமுறைப் பிள்ளைகளின் அறிவுக் கண்களைக் குருடாக்கத் துணிந்த இந்தத் துரோகத்தை மக்கள் அரசு ஒருபோதும் மன்னிக்காது. தந்தை பெரியார் பெயரில் புரட்டு வியாபாரம் நடத்திய அத்தனை சூத்திரதாரிகளையும் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அரசு சட்டத்தின் கரங்களால் மிகக் கடுமையாகத் தண்டிக்கும்!" என தெரிவித்துள்ளார்.