2 பெண்களை உயிருடன் புதைக்க முயற்சி - அதிர வைக்கும் சம்பவம்
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஹரிபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தாலம்மா மற்றும் சாவித்திரி. இவர்களுக்கு சொந்தமான வீட்டுமனையை அதே கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த ராவ், பிரகாஷ் ராவ், ராமராவ் ஆகியோர் அபகரித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
தங்களது வீட்டு மனையை மீட்டு தரக்கோரி இந்த இரண்டு பெண்களும் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தினத்தன்று இரண்டு பெண்களும் வீட்டு மனையின் அருகில் அமர்ந்து மனையை திரும்ப தரக்கோரி போராட்டம் நடத்தினர்.
அப்போது அங்கு வந்த ஆனந்த் ராவ், பிரகாஷ் ராவ், ராமராவ் ஆகிய மூன்று பேரும் டிராக்டர்களில் மண்ணை அள்ளி வந்து அந்த இரண்டு பெண்கள் மீது கொட்டி உயிருடன் புதைத்து கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.
இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மண்ணில் புதைக்கப்பட்ட அந்த இரண்டு பெண்களையும் போராடி மீட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.