முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண வழக்கு : விசாரிக்கப்படுவாரா எடப்பாடி பழனிசாமி?
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி நேரில் ஆஜாரானார்.
முன்னாள் முதல்வரும் தற்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம், சசிகலா உட்பட இதுவரை 156 பேரிடம் விசாரணையை நிறைவுசெய்துள்ளது ஆறுமுகசாமி ஆணையம்.
இந்த வழக்கில் முன்னாள் முதல்வரும் தற்போதைய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க வேண்டும் என்று புகழேந்தி மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த 19-ம் தேதி விசாரணைக்காக ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்ததை தொடர்ந்து புகழேந்தி கடந்த 19 -ம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
இதையடுத்து மீண்டும் மறுவிசாரணைக்கு ஏப்ரல் 26-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று புகழேந்தியிடன் கூறப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று நேரில் ஆஜராகி 200 பக்கங்கள் அடங்கிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கில் வழக்கில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்துவது குறித்து இன்று முடிவு செய்யப்பட உள்ளது. அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கலாமா ? வேண்டாமா என்பதை ஆணையம் இன்று முடிவு செய்து அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
அப்பல்லோ மருத்துவமனை தரப்பு விசாரணைகளும் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் முன்னாள் முதலமைச்சர் மரணம் குறித்த இறுதி அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.