திருவாரூர் ஆழித் தேரோட்டத்தில் சூர்யா ரசிகர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு - நடந்தது என்ன?
மிகவும் பிரசித்திப்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.
ஆசியாவிலேயே இக்கோயில் தேர் தான் மிகப் பெரியதாகும். சுமார் 96 அடி உயரம் 350 டன் எடை கொண்டது. இவ்வளவு மிகப் பெரிய தேரை இழுக்க பல்லாயிரக்கணக்கோர் கலந்து கொள்வார்கள். வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலிருந்தும் பலர் வந்து செல்வார்கள்.
இத்தகை சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் பங்குனி உத்தர திருவிழா கடந்த பிப்ரவரி 20ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வந்தது.
இதன் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் நேற்று காலை 8 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. இத்திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும்போது, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆரூரா தியாகேசா என்று கோஷமிட்டனர்.
திருத்தேர் மாலை வடக்குவீதி அருகே வந்து கொண்டிருந்தபோது, திருவாரூர் மாவட்ட சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் அமைதியை விட வலிமையான ஆயுதம் எதுவுமில்லை என்று வாசகம் பொருந்திய பதாகைகளை கையில் ஏந்தியபடி உக்ரைன், ரஷ்யா போரை நிறுத்த வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.
இந்த திருவிழாவிற்கு வந்தவர்கள் மத்தியில் இவர்கள் இப்படி நின்றுக்கொண்டு கோஷமிட்டது சிறப்பு கவனத்தைப் பெற்றது.
இது குறித்து ரசிகர் மன்றத்தினர் கூறுகையில், இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்களிடம் ரஷ்யா உக்ரைன் போர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காவும், அங்கு அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், நாம் அனைவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த பதாகைகளை கையில் ஏந்தியுள்ளோம் என்று தெரிவித்தனர்.