கலைஞர் உலகம் - ஹைட்டெக் அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி!
கலைஞர் உலக அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு மார்ச் 6-ஆம் தேதி அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் உலகம்
கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், சென்னை மெரினாவில் ரூ.39 கோடியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, பொதுப்பணித்துறை சார்பில் கருணாநிதி நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது.
பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. பதிதாக அமைக்கப்பட்ட கருணாநிதி நினைவிடம் மற்றும் புதுப்பிக்கபட்ட அண்ணா நினைவிடம் ஆகியவற்றை இன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். மேலும், இந்த நினைவிடத்தில் பல்வேறு வசதிகளுடன் பல சிறப்பம்சங்களை கொண்டுக் கட்டப்படுள்ளது.
மேலும் இதில், கலைஞர் உலகம் என்ற டிஜிட்டல் அருங்காட்சியகம், கலைஞருடன் ஒரு செல்பி என்ற அரங்கம், கலைஞரின் சிந்தனை சிதறல்கள் கொண்ட அறை, உரிமை வீரர் கலைஞர் என்ற ஒரு அறையில் கருணாநிதி உரையாற்றுவது போன்ற காட்சி அமைப்பு 3 டி தொழில்நுட்பத்துடன் இடம் பெற்றுள்ளது.
மக்கள் அனுமதி
இந்தக் கலைஞர் உலக அருங்காட்சியகத்தினைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு 6-3-2024 புதன்கிழமை முதல் அனுமதிக்கப்படும். இதனைப் பார்வையிடுவதற்குத் தமிழ்நாடு அரசின் https://www.kalaignarulagam.org/ என்ற இணைய முகவரி மூலம் பதிவு செய்து மக்கள் அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.
இந்த அனுமதி சீட்டு பெறுவதற்குக் கட்டணம் ஏதுமில்லை. முற்றிலும் இலவசமாகக் கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நிகழும்6 காட்சிகளுக்கு பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப நேரத்தைத் தேர்வுசெய்து முன்கூட்டியே சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.
அக்காட்சியின் நேரத்திற்கு 30 நிமிடம் முன்பாகவே வருகைபுரிய வேண்டும். கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பார்வையிட ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஆகும். கலைஞர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிச் சீட்டு ஏதும் தேவையில்லை.