கருப்பு பூஞ்சை நோய் மனிதனை எப்படி தாக்குகிறது - அறிகுறிகளும், தடுக்கும் வழிமுறைகளும்!
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவி மனித உயிர்களை அழித்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனாவின் வீரியமும், அதன் நிலைத்தன்மையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவால் மனித இனமே சிறிது சிறிதாக அழியும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதனால் அனைத்து உலக நாடுகளில் உள்ள மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவலால், உலக நாடுகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய அரசும், மாநில அரசும் பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இது ஒரு புறம் இருக்க, தற்போது கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இது மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பு பூஞ்சை நோய் எப்படி உருவாகிறது? அதன் அறிகுறி என்ன? எப்படி நம்மை தற்காத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம் -
நம் நாட்டில் பல காலங்களாக கருப்பு பூஞ்சை நோய் இருக்கிறது. இந்தக் கருப்பு பூஞ்சை நோய் மண் மற்றும் அழுகிப்போன மரங்கள், இலைகள் போன்றவற்றிலிருந்து உருவாகி மனித உடலில் உள்ள வெட்டுக்காயங்கள், மூக்கு துவாரங்கள் மூலமாக உள்ளே சென்று உடலைத் தாக்குகிறது.
கருப்பு பூஞ்சை நோய், மனித உடல் பகுதியில் ஊடுருவி ஒரு இடத்தை தாக்கி, அதை அழுகும் நிலைக்கு கொண்டுவந்து, கருப்பாக மாற்றிவிடும். இதற்கு தான் கருப்பு பூஞ்சை என்று சொல்லப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை கருப்பு பூஞ்சை நோய் நொடியில் தாக்கிவிடும். அதனால்தான், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை இழந்தவர்களை இந்த நோய் எளிதில் தாக்குகிறது.
இந்த கருப்பு பூஞ்சை நோய், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத அனைத்து வயதினரும் தாக்கக்கூடியது.
அதனால் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் 2, 3 மாதங்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
கருப்பு பூஞ்சை நோய் அறிகுறிகளும், தடுக்கும் வழிமுறைகளும் -
தொண்டையில் கெட்டிச்சளி, மூக்கடைப்பு, தலைவலி போன்ற அறிகுறிகள் இருக்கும்.
இந்த நோய் தாக்கியவர்களக்கு கண் சிவந்து, வீங்கி இருக்கும்.
பார்வை இரட்டை, இரட்டையாக மாறிவிடும். பார்வை நரம்புகள் அழுகச் செய்து பார்வை பறிபோகும்.
சில நாட்களில் இது மூளைப்பகுதியை தாக்கி, மூளைக்காய்ச்சல் நோயினால் மரணத்தை கூட சந்திக்க நேரிடும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், ஸ்டீராய்டு மருந்து தொடர்ச்சியாக எடுப்பவர்கள், வயதானவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களை இந்த நோய் அதிகம் தாக்கும்.
இந்த நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சுற்றுப்புறத்தை மிகவும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3 மாதம் வரை வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
வெளியில் செல்லும் போது முகக்கவசத்தை அணிந்து கொள்ள வேண்டும்.
கீரை, காய்கறிகள், பழங்கள் என சத்து மிகுந்த உணவுகளை தினசரி சாப்பிட்டு வர வேண்டும்.