வில்லிவாக்கம் தொகுதியில் கள்ள ஓட்டு போட்ட வாலிபர் கைது
சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் கள்ள ஓட்டு போட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நேற்று தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றது. சென்னை வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்த ரவிச்சந்திர ஹாசன், நேற்று மதியம் வில்லிவாக்கம் ஜெகநாதன் தெருவில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்கு, வாக்களிக்க வந்துள்ளார். நீண்ட நேரம் காத்திருந்த அவர் தனது ஆவணத்தை காண்பித்தபோது நீங்கள் ஏற்கனவே வாகு செலுத்தி விடீர்கள் என அவரிடம் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது, அந்த தேர்தல் அலுவலர், ‘‘முன்னதாகவே நீங்கள் ஒட்டு போட்டிங்களா’’ என கேட்டார்.
இதனால், அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திர ஹாசன் ‘‘நான் இப்பதான் ஒட்டு போட வருகிறேன்’’ எனக்கூறி வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். அப்போது, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண், இப்போதுதான், ‘‘உங்கள் ஓட்டை ஒருத்தர் போட்டுவிட்டு போகிறார்’’ என்றார்.
இதை கேட்ட கள்ள போட்ட அந்த வாலிபர் அங்கிருந்து தப்ப முயன்றார். சுதாரித்துக்கொண்ட ரவிச்சந்திர ஹாசன், அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்து, வில்லிவாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
அப்போது, போலீசார் கள்ள ஓட்டு போட்ட வாலிபருக்கு ஆதரவாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ரவிச்சந்திர ஹாசன் சாலை நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், கள்ள ஓட்டு போட்ட வாலிபரை வில்லிவாக்கம் காவல் நிலையம் அழைத்து சென்று, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.