ஜாமினில் கூட வெளிவரமுடியாது...ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட்...அப்படி என்ன செய்தார்..?
அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பிரபல சினிமா இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர் கே செல்வமணி
விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த புலன் விசாரணை படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.கே. செல்வமணி. தொடர்ந்து கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி போன்ற வெற்றி படங்களை இயக்கிய இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு நடிகை ரோஜாவை திருமணம் செய்துகொண்டார்.
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் தொடர்ந்து முக்கிய நபராக திகழ்ந்து வரும் ஆர்.கே.செல்வமணி, கடந்த 2016-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பைனான்ஸ்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
அந்த பேட்டியில் போத்ரா குறித்து அவதூறாக பேசினார் என கூறி ஆர்.கே.செல்வமணி மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை போத்ரா தொடர்ந்திருந்தார். அவர் மரணமடைந்த நிலையில், இந்த வழக்கை அவரது மகன் ககன் போத்ரா நடத்தி வருகிறார்.
பிடிவாரண்ட்
இந்த வழக்கில் தொடர்ந்து சம்மன் அளிக்கப்பட்ட போதும், அவர் நேரில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை 15-வது மாஜிஸ்திரேட்டு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை துவங்கப்பட்ட நிலையில், ஆர்.கே.செல்வமணி சார்பில் எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. அதே நேரத்தில் ஆர் .கே செல்வமணியும் நேரில் ஆஜராகவில்லை.
இதன் காரணமாக, ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை அதிரடியாக பிறப்பித்துள்ளார் நீதிபதி. மேலும், இந்த வழக்கின் மீதான விசாரணையை வருகிற செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.