பழனிச்சாமியின் முன்னாள் உதவியாளரின் நண்பர் கைது - நடந்தது என்ன?
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.37 கோடி பணமோசடி புகாரில், ஈபிஎஸ்ஸின் முன்னாள் தனி உதவியாளர் மணியின் நெருங்கிய நண்பர் செல்வகுமாரை இன்று சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
சேலம் மாவட்டம், ஓமலூர் தின்னப்பட்டி அடுத்த பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியிடம் 10 ஆண்டுகால தனி உதவியாளராக இருந்து வந்தார்.
இந்நிலையில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பணமோசடி செய்ததாக நெய்வேலியினைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.
இதனையடுத்து, முன்ஜாமீன் கோரிய மணியின் மனு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், பணமோசடி செய்த புகாரில் மணியை, கடந்த நவம்பர் மாத இறுதியில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.37 கோடி பணமோசடியில் ஈடுபட்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்ஸின், முன்னாள் உதவியாளர் மணியின் நண்பர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். 3 மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்து வந்த செல்வக்குமாரை சேலம் மாவட்டம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.