சிறுமியை திருமணம் செய்த ராணுவ வீரருக்கு 22 ஆண்டுகள் சிறை
சிறுமியை திருமணம் செய்துக் கொண்டதாக ராணுவ வீரர் ஒருவருக்கு மதுரை நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
மதுரையை சேர்ந்த பெத்தனசாமி என்னும் நபர் 18 வயது பூர்த்தியடையாத தனது மகளை உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான பிரபுவுக்கு(33) கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளார்.
கட்டாயப்படுத்தி சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணம் முடிந்ததும் ஜம்மு-காஷ்மீரில் தான் பணிபுரிந்து கொண்டிருந்ததால் பிரபு சிறுமியை ஜம்மு-காஷ்மீருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அதன் பிறகு, டிரான்ஸ்பர் ஆனதால் ஆந்திராவுக்கு அழைத்து வந்துள்ளார். அங்கிருந்து எஸ்கேப் ஆன சிறுமி மதுரைக்கு வந்து முத்துப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கியுள்ளார்.
மேலும் தனது விருப்பமின்றி திருமணம் செய்து வைத்ததாக மதுரை தெற்கு மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் ராணுவவீரர் பிரபு, அவரது தாய், சிறுமியின் தந்தை ஆகிய மூன்று பேரின் மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதிகா, சிறுமியை கட்டாய திருமணம் செய்த ராணுவ வீரர் பிரபுவுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் சிறுமியின் தந்தை மற்றும் பிரபுவின் தாயாருக்கு தலா இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.